யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஒப்பற்ற வரலாறு
தமிழையும் சைவத்தையும் காப்பதற்காக யாழ் இந்துக் கல்லூரி நிறுவப்பட்டு நூற்று முப்பது ஆண்டுகளைக் கடந்தும் இலங்கைத் தீவின் முதன்மையான கல்லூரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. எமது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது இலங்கையின் வரலாற்றில் பதிவு செய்யத்தக்க சாதனைகள் பலவற்றை புரிந்திருக்கின்றது. எமது கல்லூரியின் மாணவர்கள் பலரும் போற்றவும் பெருமை கொள்ளத்தக்கதுமான பதவிகள் பலவற்றை வகித்து வருகின்றனர்.
கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும்
இலங்கையில் காலனித்துவ ஆட்சியை புரிந்தவர்களுள், இலங்கையின் கல்வி, பண்பாடு, அரசியல் செயற்பாடுகளில் ஆதிக தாக்கத்தினை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களாவர். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியினை தமிழ்ச் சைவ மாணவர்கள் கட்டணம் செலுத்தி கிறிஸ்தவ பண்பாட்டுச் சூழலிலேயே கற்க வேண்டிக் காணப்பட்டது. இலங்கையில் உயர் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கு ஆங்கிலக் கல்வி கட்டாயம் என்ற நிலையில் அந்த கல்வியை தமது பண்பாட்டை விட்டுக் கொடுத்தே கற்க வேண்டிய சூழல் காணப்பட்டது.
ஆங்கில மொழிக் கல்வியினை வழங்குவதற்கு மிசனரிமார்கள் யாழ்ப்பாணத்தில் பெருமளவு பாடசாலைகளை நிறுவி கல்வி புகட்டிய போதும் அவர்களுடைய நோக்கம் மதத்தினை பரப்புவதாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நாவலர் உள்ளிட்ட பல நல்லறிஞர்களால் சைவத்தையும் தமிழையும் காப்பதற்காக பாடசாலைகள் பலவும் உருவாக்கப்பட்ட போதும் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவும் முயற்சி கைகூடவில்லை.
1887 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினது முதன்மையான அடித்தளம் இடப்பட்ட ஆண்டாகும். இதன் போது யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இயங்கிய சுதேசிய பட்டின மேல் நிலைப் பள்ளியுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. சுதேசிய பட்டின மேல்நிலைப் பள்ளியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.வில்லியம் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளையினால் உருவாக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பாடசாலையானது 1889 இல் நிதிப்பற்றாக்குறையின் விளைவாக அதனை கொண்டு நடாத்துவதில் ஏற்பட்ட சிரமங்களின் காரணமாக சிதம்பரப்பிள்ளையினால் சைவத்திற்காகவும் தமிழுக்காகவும் பெருந்தொண்டாற்றிய அட்வகேட் நாகலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நாகலிங்கம் அவர்கள் பாடசாலையை சைவர்கள் அதிகம் வசித்த வண்ணார்பண்ணைக்கு இடம் மாற்றினார். அட்வகேட் நாகலிங்கம் அவர்கள் பிரசித்தமான வழக்கறிஞராகவும் தேசிய உணர்வும் வள்ளண்மையும் கொண்டவராகவும் அங்கீகாரம் பெற்றிருந்ததால் அப்பாடசாலை “நாகலிங்கம் பட்டினப் பாடசாலை” என்று அழைக்கப்பட்டது.
பாடசாலையை மிகவும் திறம்பட முன்னெடுத்துச் சென்றிடுவதற்காக, நாகலிங்கம் அவர்கள் பாடசாலையை 1890 இல் பாடசாலை சைவபரிபாலசபையின் மேற்பார்வையின் கீழ்க் கொண்டு வந்தார். அவ்வாறு சைவ பரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்ட போது, கல்லூரியின் பெயர் “இந்து உயர் பாடசாலை” என்று அழைக்கப்படலானது.
இதனை மேற்பார்வை செய்வதற்கென்று அறுவர் கொண்ட உப குழு அமைக்கப்பட்டது. இதில் திரு.த.செல்லப்பாபிள்ளை (ஓய்வு பெற்ற திருவாங்கூர் பிரதம நீதியரசர்) அவர்கள் தலைவராகவும், நியாயவாதி திரு.சி.நாகலிங்கம் அவர்கள் உபதலைவராகவும், திரு.வி.காசிப்பிள்ளை செயலாளராகவும், திரு.சி.த.மு.பசுபதிச் செட்டியார் பொருளாளராகவும், திரு.ஏ.சபாபதி, திரு.த.கைலாசபதி ஆகியோர் உறுப்பினராகவும் செயற்பட்டனர்.
இந்த உபகுழுவினர், பாடசாலையின் முகாமையாளராக திரு.சி.நாகலிங்கம் அவர்களை நியமித்தது. பாடசாலையின் வளர்ச்சியில் அதீத அக்கறை கொண்டு செயற்பட்ட அவர் 04.08.1897 இல் அமரத்துவம் அடையும் வரை சிறந்த முகாமையாளராகவே கடமை புரிந்தார். முதலாவது தலைமை ஆசிரியராக திரு.எஸ்.அப்பாப்பிள்ளை அவர்கள் கடமையாற்றினார்.
கல்லூரி படிமுறை படிமுறையாக வளர்ச்சியுற்று வந்த போதும் கல்லூரிக்கென்று நிரந்தரமான காணி காணப்படவில்லை. இந்தச் சூழலில் தான் கல்லூரிக்கென்று காணியை வாங்கி கல்லூரியை நிலைபெறச் செய்வதில் திரு.மு.பசுபதிச்செட்டியார் பெரும்பங்காற்றினார்.
ஒழுங்குமுறையாக சைவபரிபாலன சபையினரால் 23.10.1890 இல் இந்து உயர் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போதைய இலங்கை சட்டசபை உறுப்பினராகவிருந்த திரு.பொ.இராமநாதன் அவர்களுக்கு வரவேற்பு விழா நாடாத்துவதற்கென உருவாக்கப்பட்ட வரவேற்பு பந்தலில் ஆரம்ப வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதுபற்றி இந்து சாதனப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
வரவேற்புப் பந்தல் போடப்பட்ட 6 ¼ பரப்புக் காணியிலேயே இந்துக் கல்லூரியின் பிரதான கட்டடம் அமைக்கப்பட்டது. பாடசாலைக்கான இக்காணியை கொள்வனவு செய்வதில் திரு.மு.பசுபதிச்செட்டியாரின் பங்கு அளப்பரியது. மாரிமுத்து உபாத்தியாயர் தாம் ஏலத்தில் வாங்கிய காணியை சைவபரிபாலன சபைக்கு நியாயவிலைக்கு விற்குமாறு பசுபதிச் செட்டியார் அவர்கள் ஆலோசனை கூறியிருந்தார். இதனடிப்படையில் சைவபரிபாலன சபையின் அப்போதைய செயலாளராயிருந்த திரு.வி.காசிப்பிள்ளையின் பெயருக்கு இந்து உயர் பாடசாலைக்குரிய காணி எழுதப்பட்டது.
நியாயவாதி திரு.நாகலிங்கத்தின் சகோதரர் எஸ்.சபாபதிப்பிள்ளை அவர்களும் இப்பள்ளிக்கு நன்கொடை வழங்கியதாக 02.01.1904 இந்து சாதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் திருவிதாங்கூர் பிரதம நீதியரசர் செல்லப்பாபிள்ளையின் மனைவியும் நியாயவாதி சி.நாகலிங்கத்தின் சகோதரியுமாக சீமாட்டி ஐயாயிரம் ரூபா பெறுமதி கொண்ட ஐம்பது பரப்புள்ள புகையிலைத் தோட்டத்தை இந்து உயர் பாடசாலைக்கு நன்கொடையாக கொடுத்தமை பற்றி 19.02.1917 அன்று வெளிவந்த இந்து சாதனம் ஏடு குறிப்பிடுகின்றது.
நியாயவாதி திரு.சி.நாகலிங்கத்தின் பெருமுயற்சிகளுக்கு பக்கபலமாக நின்றவர் இந்து சமயப் பற்றாளரும் கொடைவள்ளலுமான திரு.பசுபதிச்செட்டியாரே என்று விதந்துரைக்கப்படுகின்றது. 1916இல் நிகழ்ந்த கல்லூரி விழாவில் கல்லூரியை நிறுவுவதில் பசுபதிச் செட்டியாரின் பங்களிப்பு குறிப்பிட்டதாக 14.09.1916 இந்து சாதனம் குறிப்பிடுகின்றது.
இந்து உயர் பாடசாலைக்குரிய நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் 04.05.1891 இல் நாட்டப்பட்டு 1895இல் முதலியார் பொ.குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1890 இல் இப்பாடசாலை தொடங்கும் போது எண்பதாக இருந்த மாணவர் தொகை 1891 இல் 248 ஆக உயர்வடைந்திருந்தது.
இந்து உயர் பாடசாலை என்ற பெயரிலிருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்ற நிலைக்கு இக் கல்வி நிறுவனம் வளர்வதற்குரிய பெருமை 18.02.1892 இல் தலைமை ஆசிரியராக பெறுப்பேற்ற திரு.நெவின்ஸ் செல்வத்துரைப்பிள்ளை அவர்களையே சாரும்.
ஆசிரியர்களுக்கு சம்பளங்களைக் கொடுப்பதற்குக் கூட நிதியில்லாத நிலையும் அரச நிதியுதவி பெறும் தகுதியை பெறாமலிருந்த நிலையும், சிரமமான நிர்வாக நிலைமைகளை உருவாக்கியிருந்தன. இத்தகைய நிலைமையிலிருந்து கல்லூரி மீண்டெழுவதில் தலைமையாசிரியர் திரு.நெவின்ஸ் செல்வதுரையின் உழைப்பும் உண்மையான ஈடுபாடும் பெரும் பங்காற்றின.
1893 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தினால் உயர்நிலைப் பாடசாலையாக இந்துக் கல்லூரி அங்கீகரிக்கப்பட்டது. இதன்மூலம் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பட்ட முதலாமாண்டு அனுமதித் தகுதி வழங்கும் மட்டம் வரை இந்துக் கல்லூரியில் கற்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1895இல் கல்லூரிக்கான பிரதான கட்டடம் திறந்து வைக்கப்பட்டதோடு, அரச நன்கொடை பெறும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டதோடு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்றும் அழைக்கப்படலானது.
இருபதாம் நூற்றாண்டில் எழில்மிகு வளர்ச்சி
கிறிஸ்தவ சமய மாற்றம் முனைப்புடன் நிகழ்ந்த இக்காலகட்டத்தில் இந்து மற்றும் மலர்ச்சி இயக்கங்கள் அதிக ஊக்கத்துடன் இயங்கின.
இந்துப் பண்பாட்டுச் சூழலில் ஆங்கிலமொழிக்கல்வி வழங்கும் கல்லூரியாக இயங்கிய இந்துக் கல்லூரியின் நிர்வாகத்தை இயக்குனர் சபை ஒன்றின் கீழ் கொண்டுவருவதற்கு செய்யும் இந்துக் கல்லூரி அதிகார சபைச்சட்டம் கரையோர சிங்களவர்களுக்கான பிரதிநிதியான எஸ்.சி.ஒபயசேகரா மற்றும் மலைநாட்டு சிங்கள பிரதிநிதியான எஸ்.என.டபிள்யு.கலுகல்ல ஆகியோரது முயற்சியினால் 1902இல் சட்டவாக்க சபையில் கொண்டுவரப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்துக் கல்லூரிக்கான இயக்குநர் சபையில் அட்வகேட் கனகசபை தலைவராகவும், ராவ்பகதூர் முருகேசப்பிள்ளை உபதலைவராகவும், புறக்டர் விகாசிப்பிள்ளை செயலாளராகவும் வி.சண்முகம் உபசெயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
1960இல் இந்துக் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்கும் காலம்வரை கல்லூரியை நிர்வகித்து வந்த இயக்குனர் சபையில் பொருளாளராக எம்.பசுபதிச் செட்டியர் அவர்களும், எண் பரிசோதகராக ஆர்.கந்தையா அவர்களும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
1903 இல் இந்துக் கல்லூரி வளர்ச்சிக்கென இந்துக் கல்லூரி நிதியம் ஒன்றை உருவாக்கும் எண்ணத்துடன் இலங்கையிலும் மலேசியாவிலும் நிதி திரட்டப்பட்டது. கல்லூரியின் பூர்த்தி செய்யப்படாத கட்டடங்களை கட்டிமுடிப்பதற்கு இந்த நிதியம் உதவிற்று.
1904 இல் சென்னைப் பல்கலைக்கழகம் தனது ஆழ்புலப்பரப்பினை அகலித்தபோது இந்துக் கல்லூரியும் அதனுடன் இணைக்கப்பட்டது.
1906 ஆம் ஆண்டுடென்பது இந்துக்கல்லூரி வரலாற்றில் மறக்கமுடியாத காலப் பகுதியாகும். இவ்வாண்டில் மூன்று முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
- புகழ்பெற்ற கலை இலக்கிய ஆர்வலரான டாக்டர்.ஆனந்தகுமாரசுவாமி அவர்கள் 04.06.1906 ஆம் ஆண்டு கல்லூரிக்கு வருகை தந்ததோடு, தேவாரத்தை பண்ணுடன் பாடும் திறன்கொண்ட மாணவரை ஊக்குவிப்பதற்கென ரூபா 5000 இனை வழங்கினார்.
- சென்னைப் பல்கலைக்கழக மெற்ரிகுலேசன் கலைப்பட்ட முதலாமாண்டுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் இருவர் பின்னர் சித்தியடைந்தனர்.
- கல்லூரியை நிறுவுவதில் சி.நாகலிங்கம் அவர்களுடன் அரும்பாடுபட்டவரும் கல்லூரி வளர்ச்சிக்கு பல நற்பணிகள் ஆற்றியவருமான பசுபதிச்செட்டியார் அவர்கள் 09.03.1906இல் இறைபதம் அடைந்தார்.
1907ஆம் ஆண்டில் தீவிரமான இந்துமதப் பற்றாளரும், புகழ்பெற்ற பேச்சாளருமான தாகூர்கான் சந்திரவர்மா (Thakurkhan Chandravarma) இந்துக் கல்லூரிக்கு வருகைதந்து கிறிஸ்தவ மத எதிர்ப்புணர்வுடன் உரையாற்றினார். உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி அவர்கள் அவரை வெகுவாக உரையாற்றினார்.
கல்லூரி வளர்ச்சிக்கென நிதி திரட்ட மலாயா தீபகற்பம் செல்வதென ஒரு தசாப்தகாலத்திற்கு முன் மேற்கொண்ட தீர்மானம் செயலுருப் பெற்றது போல் இதே தினத்தில் கல்லாரிக்கு நிதிசேகரிப்பும் இடம்பெற்றது. அன்றைய தினத்தில் மாத்திரம் திரட்டப்பட்ட ஆறாயிரம் ரூபாவில் ஆயிரம் ரூபாய் உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமியினாலேயே வழங்கப்பட்டிருந்தமை கவனத்திற் கொள்ளத்தக்க அம்சமாயிருந்தது.
வர்மாவின் கிறிஸ்தவ மத எதிர்ப்பு பேச்சினால் மனவேதனையடைந்த அப்போதைய அதிபர் நெவின்ஸ் செல்வதுரை தமது அதிபர் பதவியை துறந்து கண்டியில் இயங்கிவந்த கிறிஸ்தவ கல்லூரியில் தலைமையாசிரியர் பதவியினை ஏற்றுக்கொண்டார்.
அப்போது தேசிய வங்கியின் பிரதான சிறாப்பாக விளங்கிய திரு.சி.ஞானசேகரம் என்பவரது நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவந்த பிரதான கட்டடத்தின் வடபகுதி கட்டடம் அன்றைய பிரித்தானிய தேசாதிபதி ஹென்றி மக்கலம் அவர்களினால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் பல ஆக்கபூர்வமான நிறைவேறின.
- 1910 மே மாதம் 30 ஆம் திகதி கல்லூரியின் விடுதிச்சாலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. 1891 இல் அது ஆரம்பிக்கப்பட்டபோதும் சில வசதியீனங்களினால் மூடப்பட்டிருந்தமையினால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. விடுதிப் பொறுப்பாளராக வீராசாமிப்பிள்ளை நியமிக்கப்பட்டார் .
- “இந்துக் கல்லூரி கலண்டர்” என்ற சஞ்சிகை 100 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டது. முதலாவது முகாமையாளர் அட்வகேட் நாகலிங்கம், முதலாவது அதிபர் நெவின்ஸ் செல்லத்துரை ஆகியோரது புகைப்படங்களும், இதில் வெளியிடப் பட்டிருந்தன. கல்லூரியின் வரலாறு, செயற்பாட்டு நிகழ்ச்சிநிரல், கல்லூரியின் பட்டயம், கற்கைநெறி, ஆசிரியர் விபரம், கல்லூரி ஒழுக்க முறைமை, இலக்கிய கழகங்கள், விடுதிச்சாலை, பழைய சபை. காரைதீவுப் பாடசாலை விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
- 1910 ஜனவரி 19 இல் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது. நெவின்ஸ் செல்லத்துரையின் பின் இந்துக் கல்லூரி அதிபராக பதவி ஏற்றிருந்த திரு.ஜி.சிவராவ் அவர்களினால் இக்கிளை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவரது தலைமையில் இந்துக் தலைமையில் இந்துக் கல்லூரிக்கான உதவிகளை வழங்குவதற்கென்றே சென்னையில் ஒரு சங்கம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக அதிகளவு நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
- இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கென நிதி திரட்டுவதற்கு திரு.வி.காசிப்பிள்ளை, திரு.ஆர்.கந்தையா முதலியார் ஆகிய இருவரும் மலாயா நாட்டிற்கு சென்று இரண்டு மாதகாலமாக நிதி திரட்டினர் . அமெரிக்கரான வள்ளல் மைரன் எச்.பெல்ப்பும் (Myron H.Phelp) இவர்களுக்கு நிதியுதவி வழங்கியதை அறியமுடிகிறது.
- இதே ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் தினம் காக்கைதீவு திறந்தவெளி அரங்கில் விளையாட்டுப் போட்டியையும் நடாத்தி, அன்று மாலை கல்லூரியின் ஞானசேகரம் மண்டபத்தில் வருடாந்த பொதுக்கூட்டத்தையும் நடாத்தியிருந்தது.
1914இல் நெவின்ஸ் செல்வத்துரை மீண்டும் இந்துக் கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்றபோது அவர் அதிகளவுக்கு பிரித்தானிய அரசுக்கு ஆதரவான போக்கினைக் கடைப்பிடித்ததாகவும் கூறப்படுகின்றது. 1915இல் இலண்டன் மெட்ரிகுலேசன் பரீட்சைகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1916இல் நடைபெற்ற பரீட்சையில் ரி.சின்னத்தம்பி என்பவர் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் வகுப்பு பெற்றார். 1916 கேம்பிரட்ஜ் சீனியர் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற எம்.எஸ்.பாலசுப்பிரமணியம் என்பவர் வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அதிவிசேட திறமையும் பெற்றமைக்காக கல்லூரி பரிசளிப்பு விழாவில் பாராட்டப்பட்டார். 1925இல் நெவின்ஸ் செல்வதுரை மலாயா தீபகற்பத்திற்கு சென்று கல்லூரி வளர்ச்சிக்கென நிதிதிரட்டித் திரும்பினார். 1926இல் இந்துக்கல்லூரி வளர்ச்சிக்கு பல மாதிரிகளிலும் உழைத்த, புகழ்பூத்த அதிபரான நெவின்ஸ் செல்லத்துரை ஓய்வுபெற்றமையை ஒட்டி மகத்தான பிரியாவிடை வைபவம் ஒன்றும் இடம்பெற்றது. இவரின் பின் பிரித்தானியரான டபிள்யூ.ஒ.ரூப் (W.A. Troup M.A) என்பவர் அதிபராக பதவியேற்று சில காலம் பணியாற்றினார். அதிபராக பதவிவகித்த ஒரேயொரு ஐரோப்பியரும் இவரேயாவார். இவரது காலத்தின் பின் எம்.சபாரத்தினசிங்கி என்பவர் தற்காலிக அதிபராக பதவி வகித்தார். இவரது காலத்தில் இந்துக்கல்லூரியின் வரலாற்றுக்கு பெருமை சேர்த்த மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 27.11.1927இல் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் அழைப்பின் பேரில் மோகனதாஸ் காந்தி அவர்கள் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து உரையாற்றினார.
- மாகாத்மாகாந்தியுடன் வருகை தந்திருந்த ராஜகோபாலச்சாரியார் அவர்கள் 28.11.1927 இல் இந்துக் கல்லூரியில் சிறந்ததோர் உரையாற்றினார்.
- அப்போதைய ஆளுநராயிருந்த சேர் . ஹேபேட் ஸ்ரான்லி அவர்கள் வருகை தந்தார்.
1928 இல் திரு.சி.ஆர்.வெங்கட்ராமன் M.A அவர்கள் கல்லூரி அதிபராக பதவியேற்றார். கல்லூரி அதிபராக பதவிவகித்த மூன்றாவது இந்தியராக இவர் விளங்கினார். இவரது காலத்தில் பல சிறப்புக்கள் நிகழ்ந்தன.
- கல்லூரிக்கான புதிய விடுதிக்கட்டடம் பூர்த்தியடைந்து ஆளுநர் சேர்.ஹேபேட் ஸ்ரான்லி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
- கல்லூரியின் உயர் வகுப்பு மாணவர் மன்றத்தினால் “கூரியர்” எனும் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.
- இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இக்காலத்தில் புனரமைக்கப்பட்டு வளர்ச்சி காணத் தொடங்கியது.
1930இல் கல்லூரியின் பழைய மாணவரான திரு . கே . சிவப்பிரகாசம் M.A (London) என்பவர் இலங்கையிலேயே முதன்முதலாக உளவியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார். கல்லூரி மாணவர்களில் முதன்முதலாக கலாநிதிப்பட்டம் பெற்றவராக திரு.சிவப்பிரகாசம் புகழ் பெறுகிறார்.
1932இல் முகாமையாளர் திரு.வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் பத்தாண்டுகளாக சிறந்த சேவையாற்றி ஓய்வுபெற்றார். அவரது இடத்திற்கு கல்லூரியின் முகாமைத்துவ சபையின் செயலாளராக பணியாற்றிவந்த திரு.ஏ.அம்பலவாணர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
1933 இல் கல்லூரியின் பழைய மாணவரான திரு.ஏ.குமாரசுவாமி (M.A) அவர்கள் அதிபராகப் பதவியேற்றார். கல்லூரியின் 125 வருடகால வரலாற்றில் புதிய விசையை பாய்ச்சியவர்களின் ஒருவராக திரு.ஏ.குமாரசுவாமி அவர்கள் கௌரவிக்கப்படுகிறார். இரண்டு தசாப்தகாலம் அதிபராக பதவிவகித்து, கல்லூரியின் நோக்கிலும் போக்கிலும் அதிகதாக்க விளைவுகளை உருவாக்கியவராக இவர் மதிக்கப்படுகிறார். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அவர் பெற்றுக்கொண்ட உயர்ந்த கல்வியறிவும், பல இடங்களிலும் பல நிலைகளிலும் பெற்றுக்கொண்ட பரந்துபட்ட அனுபவங்களும் கல்லூரி வளர்ச்சிக்குரிய பல உள்ளீடுகளை அவர் வழங்குவதற்கு உதவியாயிருந்தன. வரலாறு முழுதும் நிலைக்கக்கூடிய பல உன்னதங்களை அவர் நிலைநிறுத்தினார்.
- விஞ்ஞான ஆய்வுகூடங்களை நவீனமயப்படுத்தி விரிவுபடுத்தியமை.
- விடுதி வசதிகளை அதிகரித்தமை.
- விளையாட்டு மைதான விஸ்தரிப்பு மூலமாக விளையாட்டுத்துறையை மிகச் சிறந்த இணைக் கலைத்திட்ட செயற்பாடாக மாற்றயமைத்தமை.
- கைத்தொழில் திறன்களை மாணவர்களிடம் மேம்படுத்தும் வகையில் கைத்தொழில் பயிற்சிக்கூடம் நிறுவியமை.
- புவியியல் கற்பதற்கான வசதிகள் நிறைந்த புவியியல் ஆய்வுகூடம் நிறுவியமை
- வரலாற்றுத்துறை நூலகம் நிறுவியதோடு, நூலகத்தை நவீன வசதிகள் நிறைந்ததாக மாற்றியமைத்தமை
- சாரணிய இயக்கத்தை தொடங்கியமை
- இந்து சஞ்சிகையை வெளியிட்டு மாணவரிடையே படைப்பாற்றல் ஊக்கத்தை மேம்படுத்தியமை. ஆறுமுக நாவலரது உள்ளக் கமலத்தில் உதித்த அதே உணர்வுகள் இவரிடமும் பொங்கிப் பெருகின .
- மாணவரிடையே சைவசமய உணர்வையும், பண்பட்ட நடத்தைகளையும் வளர்க்கும் நோக்குடன் நடராஜர் ஆலயம் ஒன்றை கல்லூரியிலேயே அமைக்கவும் ஆயிரம் பேர் கூடியமரக்கூடிய மண்டபம் ஒன்றை அமைக்கவும் முற்பட்டமை.
இவரது காலத்தில் கல்லூரியின் பொன்விழாவும், பவளவிழாவும் கொண்டாடப்பட்டன. இதன்போது பொருட்காட்சிகளையும், களியாட்ட விழாக்களையும் நடாத்தி, அவற்றின் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு , கல்லூரித் தேவைகள் நிறைவு செய்யப்பட்டன. மிகச் சிறந்த கல்விமான்கள் தமது அறிவின் விசாலத்தை சமூகத்திற்குரியதாக பயன்படுத்தி மகிழ்வுறுவர் என்பதற்கு அதிபர் குமாரசுவாமியின் கொள்கைகள் மற்றும் செயலாற்றங்கள் உதாரணமாக திகழ்கின்றன. அவற்றுள் முக்கியமானவை பின்வருவன,
- அகில இலங்கை அதிபர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இலங்கையின் தேசிய மொழிகள் அரச கரும மொழிகளாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை அரச கருமமொழி ஆணைக்குழுவினருக்கு விடுத்தார்.
- இலவசக் கல்விக் கொள்கையை கலாநிதி C.W.W.கன்னங்கரா அவர்கள் வலியுறுத்தியபோது அதனை பல தனியார் பாடசாலைகள் எதிர்த்து நின்ற சூழ்நிலையில் இலவசக் கல்வித்திட்டத்தை ஆதரித்து தனது கருத்தை துணிந்து வெளியிட்டார்.
- பெண் கல்வி வாய்ப்பு , பால் நிலை சமத்துவம் பற்றிய சார்புநிலை மனப்பாங்கு கொண்டவராக விளங்கியதோடு, இந்துக் கல்லூரியில் இருபாலாரையும் கல்வி பயிலவைத்து, இந்துப் பெண்பிள்ளைகளுக்கென தனியான இந்து மகளிர் கல்லூரி நிறுவப்படுதற்கான தேவையையும் வலியுறுத்தினார்.
இந்துக் கல்லூரி எழுச்சிமிக்க வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதில் மிகப்பெரிய பங்காற்றியவர்களில் திருவாளர் ஏ.குமாரசுவாமி அவர்கள் முதன்மையானவர். கல்லூரி வளாகத்தில் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் குமாரசுவாமி மண்டபம் இன்றும் அவர் புகழைப் பறை சாற்றிக்கொண்டிருகின்றது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக கல்லூரியின் வளர்ச்சியுடன் ஒன்றித்து வாழ்ந்த அவர் திடீரென மறைந்தமை பேரதிர்ச்சியைத் தந்தது. அவரது இடத்துக்கு திரு. வி.எம்.ஆசைப்பிள்ளை BSc (London) அவர்கள் அதிபராக பதவியேற்றார் . அவரது காலத்திலும் கல்லூரி பல தளங்களில் உயர்வளர்ச்சி பெற்றது.
சுதந்திர இலங்கைக் காலம் – சுதேசியம் நோக்கி . . .
1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து இலங்கையின் கல்வித்துறையிலும் பாடசாலைக் கல்வியிலும் பல திருப்திகரமான முன்னேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன . இவை இந்துக் கல்லூரியின் வளர்ச்சியையும் பல நிலைகளில் நேர்முறையாக பாதித்தன.
இக்காலத்தில் அதிபராயிருந்த திருவாளர் ஆசைப்பிள்ளையின் பல மாறுதல்கள் பாடசாலைக் கல்வி தொடர்பாக ஏற்பட்டன.
1953இல் ஆறாம் வகுப்பிலிருந்து தமிழ்மொழிமூல போதனை வந்தது. இதனைத் தொடர்ந்து 1954இல் கஸ்தூரியார் வீதியில் அமைந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த நிரந்தரக் கட்டடத்துக்கு ஆரம்பப்பிரிவு மாற்றப்பட்டதோடு, கல்லூரி மைதானமும் விஸ்தரிக்கப்பட்டது.
1955இல் இந்துக் கல்லூரியின் நிறுவுநரும் முதலாவது முகாமையாளருமாக பணியாற்றி அமரத்துவம் அடைந்த அட்வகேட் சி.நாகலிங்கம் அவர்களது நூற்றாண்டு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
1956இல் கல்லூரியின் இணை ஸ்தாபகரும் வள்ளலுமாகிய சித.மு.பசுபதிச்செட்டியரின் நூற்றாண்டு விழா கல்லூரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதே ஆண்டில் விடுதிச்சாலைக்குரிய உணவு பரிமாறும் மண்டபம் ஏற்படுத்தப்பட்டதுடன், தங்குமிட வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டன. புதிய விஞ்ஞான மண்டபம் ஒன்றுக்கான அத்திவாரமும் இடப்பட்டது. கல்லூரி பல நிலைகளில் வளர்ச்சியடையலாயிற்று.
1960 டிசம்பரில் முகாமைத்துவ சபையினால் நடாத்தப்பட்டு வந்த கல்லூரி நிர்வாகம் இலங்கை அரசின் கைகளுக்கு மாற்றப்பட்டது. இதன் பின் அரச பாடசாலையென்ற தரநிலையில் கல்லூரியின் வரலாறு புதிய திசையில் திரும்பலாயிற்று. அகில இலங்கை மட்டத்தில் பல்கலைக்கழக அனுமதியில் பெளதீக விஞ்ஞானத்துறையில் அதிகளவு மாணவர் இந்துக் கல்லூரியிலிருந்து தெரிவாகினர். இதில் முதலிடத்தைப் பெற்றதோடு, அகில இலங்கையின் தரமான பாடசாலைகளில் ஒன்றாகவும், வடமாகாணத்தில் இரண்டாவது நிலைகொண்டதாகவும் வளர்ச்சி பெற்றது. தனது காலத்தில் கட்டட நிர்மாணம், மைதான விரிவாக்கம், கல்வித்துறை செயலாற்றம் என்பன தொடர்பாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்திய அதிபர்.வீ.எம்.ஆசைப்பிள்ளை அவர்கள் இவ்வாண்டில் அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.
1962 இல் திரு.சி.சபாரத்தினம் அவர்கள் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இந்துக் கல்லூரி முழுமையான அரச பாடசாலையாயிற்று.
1963 இல் கல்லூரியின் வட பகுதியில் புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதோடு, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
1964 இல் புதிய பாடசாலை நிர்வாகக் கட்டடம் நிறைவடைந்து, திறந்து வைக்கப்பட்டதால் காங்கேசன்துறை வீதிப்புறமாகவுள்ள கல்லூரி வாயில் மூடப்பட்டு தற்போதைய தெற்குப் புற வாயில் திறக்கப்பட்டு பயன்படுத்தப்படலாயிற்று. இதே வருடம் திருவாளர் சி.சபாரட்ணம் ஓய்வுபெற்றதால் அவரது பெயர் நிர்வாக கட்டடத்துக்கு இடப்பட்டது.
1965 ல் வைரவிழா கொண்டாடப்பட்டு இந்து இளைஞன் மலர் வெளியிடப்பட்டது.
1968 ல் ஒரே தடவையில் 69 மாணவர்கள் எல்லாப் பீடங்களுக்குமான பல்கலைகழக அனுமதி பெற்றனர் .
1971ல் திரு.இ.சபாலிங்கம் அவர்கள் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த போது கல்லூரி விளையாட்டுதுறையில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. இன்று இவரது பெயரில் நவீன வசதிகள் கொண்ட 400 பேர் அமரக்கூடிய சபாலிங்கம் அரங்கு அவரது மகன் மருத்துவ கலாநிதி ச.சோதிலிங்கம் அவர்களால் அமைக்கப்பட்டது.
1975 ல் திரு.பி.எஸ்.குமாரசுவாமி அவர்கள் அதிபராக இருந்த போது விஞ்ஞான மண்டபம் முற்றுப் பெற்றது. இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை புரைமைக்கப்பட்டது. அதன் உதவியுடன் சனாதிபதி நிதியிலிருந்து பல இலட்சம் ரூபாய்கள் பெறப்பட்டு கல்லூரியின் தேவைக்கான கட்டடங்கள் பெருமளவு பூர்த்தியாக்கப்பட்டன. மாவட்ட ரீதியிலும், தேசிய ரீதியிலும் இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறையில் பலசாதனைகள் படைத்தது. இவர் வடமாகாணத்தின் சிறந்த அதிபர் என்ற விருதினை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டார் .
1984ல் திரு.எஸ்.பொன்னம்பலம் அவர்கள் அதிபரானார். இவரது காலத்திலேயும் கல்லூரியின் சாதனை தொடர்ந்து கொண்டே இருந்தது. கட்டிடத்துறையும் வளர்ச்சி கண்டது. இவர் இடம்மாற்றம் பெற்றுச் செல்ல 1990 ல் திரு.கே.எஸ்.குகதாசன் அவர்கள் கல்லூரி அதிபராக இருந்தபோது 1991ல் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
1991ல் திரு.அபஞ்சலிங்கம் அவர்கள் இந்துக் கல்லூரி அதிபரானார். இவரது காலப்பகுதியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பாடசாலையை நடாத்த வேண்டிய தேவை இருந்தது
இவரது காலத்தில் க.பொ.த (உ/த) ல் இந்துக் கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது 40 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் 20 மாணவர்கள் மருத்துவத்துறைக்கும் தெரிவுசெய்யப்பட்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அமைப்பு 14.10.1994ல் உருவாக்கப்பட்டது.
1995 ஒக்ரோபர் மாதம் இலங்கை இராணுவத்தின் சூரியகதிர் நடவடிக்கை காரணமாக யாழ் இந்துக் கல்லூரி இடம்பெயர்ந்து தற்காலிகமாக சாவகச்சேரியில் இயங்கிய போது திரு.இ.மகேந்திரன் அவர்கள் பதில் அதிபராக இருந்து கல்லூரியை இயக்கி வைத்தார்.
1995-1996 காலப் பகுதியில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் முதன் முதலாக கணினி ஆய்வு கூடம் நிறுவப்பட்டதுடன் மின் சக்தி இல்லாத போதும் மின் பிறப்பாக்கி மூலம் இயக்கப்பட்டதுடன் கணினி வகுப்புக்கள் நடைபெற்றன. எமது கல்லூரியில் மட்டுமே தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கணினி கற்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1996 மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு திரும்பியது. 2000 இற்கும் மேல் காணப்பட்ட மாணவர் தொகை பின் ஆயிரத்துக்கும் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர் தொகையும் குறைந்தது. இக் காலப்பகுதியில் பிரதி அதிபராக இருந்த திரு.தா.அருளானந்தம் அவர்கள் கடமை நிறைவேற்று அதிபர் கடிதத்தின் பிரகாரம் அதிபர் பொறுப்பை ஏற்றபோது “C” கட்டிடதொகுதி கல்விச் செயற்பாடுகளுக்காக திறந்துவைக்கப்பட்டது.
தொடர்ந்து இதுவரை தொடர்ந்து பிரதி அதிபர் பதவி மற்றும் கடமை நிறைவேற்று அதிபர் பதவிகளை பெற்ற திரு.பொ. மகேஸ்வரன் அவர்கள் கல்லூரியை சிறப்பாக நிர்வகித்து வந்தார்.
1997ல் திரு.அ.சிறிக்குமார் அவர்கள் அதிபரானார். “D” கட்டிடதொகுதி முழுமையாக்கப்பட்டது. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறப்பான சாதனைகளை இந்துவின் மாணவர்கள் நிலைநாட்டினார்.
1997, 1999, 2001, 2003, 2004, 2005 ஆகிய ஆண்டுகளில் தேசியரீதியில் மிகச் சிறந்த பெறுபேறுகள் கிட்டின. மாணவர்களுக்கான மன்றங்கள், கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்து இளைஞன் சஞ்சிகைகள் 1997ல் வைரவிழா மலராகவும்; 2000ல் மிலேனியம் மலராகவும் வெளிவந்தன.
1997ல் தமிழ் தினப் போட்டியில் எமது மாணவர்கள் இருவர் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்றனர். விளையாட்டுத் துறையில் சதுரங்கம், பூப்பந்து, கூடைப்பந்து, உதைபந்து ஆகிய அணிகள் தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றின.
- குமாரசுவாமி மண்டப வளாகத்தில் நாவலர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
- கூடைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டது.
- GTZ நிதி உதவியுடனும், பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி உதவியுடனும் நீர்த்தாங்கி, கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டது
2005ல் திரு.வீ.கணேசராசா அவர்கள் கல்லூரி அதிபரானார் இவரது காலத்தில் நாட்டு நிலைமை மிகவும் மோசமடைந்திருந்தது.
- குமாரசுவாமி வளாக நுழைவாயில் மற்றும் முன்புற மதில்கள் பி.எஸ்.குமாரசுவாமி பூங்கா அமைக்கப்பட்டது.
- 150 கணினிகள் பொருத்தப்பட்ட கணினி ஆய்வுகூடம் பழைய மாணவர் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
- 3 மாடி தொழில்நுட்பபீடம் அமைப்பதற்கென கல்வி அமைச்சினால் 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டடு 7.7.2014ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
23.01.2012ல் புகழ் பூத்த இந்திய அணுசக்தி விஞ்ஞானியும் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான கலாநிதி A.P.J.அப்துல்கலாம் அவர்கள் இக் கல்லூரிக்கு வந்து சிறப்புரையாற்றியமை கல்லூரியின் மதிப்பை மேலும் மெருகூட்டியது.
15.04.2014ல் கல்லூரியின் பழைய மாணவனும், விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்கள் கல்லூரிக்கு வருகை தந்து புதிய சிந்தனைகள் மலர உரையாற்றினார்.
22.08.2014ல் திரு.ஐ.தயானந்தராசா அவர்கள் இந்துவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கல்லூரியை திறம்பட நடாத்திச் சென்றார். இவரது காலப்பகுதியிலும் எமது மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்கள். இவரது காலத்தில் கல்லூரியில் பல்வேறு கல்வி, முகாமைத்துவம், விழுமியம் சார்ந்த பல முயற்சிகள் ஊக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
- க.பொ.த (உ/த) பரீட்சையில் தேசிய மட்டத்தில் கணித துறையில் (ஆங்கில மொழிமூலம்) செல்வன்.பா.டாருகிசன் அவர்கள் 1ம் இடம்பெற்று கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
- 2014ல் வில்லுப்பாட்டு, விவாதம் முதலிடத்தை பெற்றது.
- தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிறைவடைந்து அப்போதைய ஐனாதிபதி அதிமேதகு மகிந்தராஐபக்ஷ அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
- குமாரசுவாமி மண்டபம் அழகாக புனரமைக்கப்பட்டு 1987 உயர்தரப்பிரிவு மாணவர்களால் 850 கதிரைகள் இடப்பட்டு நிறைவான மண்டபம் ஆகியது.
- மாணவர்களின் புத்தாக்க திறன்கள், ஆய்வுத்திறன்கள், என்பவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் விஞ்ஞானி அப்துல்கலாம் கண்டுபிடிப்பாளர் மன்றம் உருவாக்கப்பட்டது.
இதுவரை காலமும் பிரதி அதிபராக இருந்து திரு. ச.நிமலன் அவர்கள் பதில் அதிபர் பொறுப்பேற்று நடாத்தி வந்தார்.
2019 செப்டெம்பரில் ஏற்பட்ட அசாதாரண சம்பவம் ஒன்று காரணமாக திரு.சு.பரமேஸ்வரன் அவர்கள் பதில் அதிபர் பொறுப்பினை ஏற்க வேண்டியேற்பட்டது.
அவரைத் தொடர்ந்து 16.10.2019 முதல் கல்வியிலும் விளையாட்டிலும் புகழ்பூத்த பழைய மாணவர் திரு.இ.செந்தில்மாறன் அவர்கள் கல்லூரிப் பொறுப்பை ஏற்று மிகவும் திறமையாக நடாத்திக் கொண்டிருக்கின்றார்.
இக்காலப்பகுதியில் பசுமை திறன் பாடசாலை எனும் எண்ணக்கருவுக்கு அமைய வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை பசுமையான திறன் கற்றல் முறைமையின் கீழ் கொண்டு வந்து அதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றும் வருகின்றது. பௌதீகவளம், கற்றல் வளம், ஆசிரியர் வளம் என்பவற்றை முழுமையாக பயன்படுத்தி மாணவரின் சாதனைக்கு எதிர்காலத்தில் வழிசமைக்க ஏற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இக் காலப்பகுதியில் விஞ்ஞானி சிவானந்தன் வருகை தந்ததோடு, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி உயர்தரத்திற்குள் நுழையும் மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயமலர்வும் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் அனைத்து வகுப்பறைகளும் திறன் வகுப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடனான கழிப்பறை வசதி மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.
பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர் சங்கங்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு மிக நேர்த்தியாக ஒருங்கமைக்கப்படுகின்றது.
கொரோனா இடர்காலத்தில் பாடசாலையினால் நிகழ்நிலை வகுப்புகள், கற்றல் காணொளி வெளியிடல், செயலட்டைகள் மற்றும் நிவாரணப்பணியினை தனியே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வகையில் கல்வி சார் மற்றும் கல்வி சார உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறுகின்றது. 20.02.2020 அன்று புதிய மீள் வடிவமைக்கப்பட்ட இணையதளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையில் தலைசிறந்த தேசிய பாடசாலையாகவும் முன் மாதிரி ஆண்கள் பாடசாலையாகவும் காலத்தை கடந்து சாதனை படைத்து உன்னதமான தமிழர் தலைநிமிர் கழகமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளர்ந்து பெருமை கொள்ளும்.
